கதையோடு கற்போம் தமிழ் - தலைமுறை
அனு, அக்கா, ஆன்ட்டி (மாமி)
மாமி, "பொங்கல் வாழ்த்துகள்", எனக் கூறியவாறே ஒரு சிறிய பாத்திரத்தில் பொங்கல் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள், ரமா.
மாமி, இந்த வருஷம் நான் மண் பானையில் பொங்கல் வச்சேன் (வைத்தேன்). அதான் உங்களுக்கும் கொஞ்சம் கொண்டு வந்தேன்.
என்ன ரமா, இந்த வருஷம் புதுசா மண் பானைல பண்ணிருக்க..?
அதுவா, நாங்க மேகமலை போன போது வழில குலாளர் பாளையம் கிராமத்துல இத வாங்கினேன். உங்களுக்கு தெரியுமோ - குலாளர் பாளையத்துல, பல தலமுறைகளாக இந்த மண் பாண்டம் செய்வது தான் குலத் தொழில். ஆனா பாருங்கோ, இப்ப சுமார் 20 குடும்பம் மட்டுமே பரம்பரை பரம்பரையா செய்து வரும் மண் பாண்ட தொழிலை செய்யறா. (செய்கிறார்கள்)
பல பேர் பொறியடுப்பு (COOKER) மற்றும் உலோகப் பாத்திரங்களில் சமைக்கறதுனால, மண் பாண்டங்களுக்கான தேவை குறைந்து விட்டது. அதனால் பல பேர் அந்த கிராமத்துல வேற தொழிலுக்கு போயிட்டா.
இதையெல்லாம் உற்று கவனித்துக் கொண்டிருந்த அனு, தன் அம்மா சுமதியிடம், அம்மா, ரமா அக்கா பரம்பரை பரம்பரையா ன்னு சொன்னாளே. பரம்பரைன்னா என்ன? என்று வினவினாள்.
அனு, பரம்பரை என்பது ஏழு தலமுறைகளை குறிக்கிறது. அது என்னவென்றால் ...
நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை (தாத்தா... பாட்டி)
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை (கொள்ளுத் தாத்தா + கொள்ளுப் பாட்டி)
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை (எள்ளுத் தாத்தா + எள்ளுப் பாட்டி)
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
பரன் + பரை - ஏழாம் தலைமுறை
இந்த பரன் மற்றும் பரை இணைந்து பரம்பரை ஆயிற்று.
ஆக பரம்பரை என்பது ஏழு தலைமுறைகளை குறிக்கிறது.
உதாரணமாக - நம் பரம்பரையைப் பற்றி உனக்கு தெரியுமா என்று ஒருவர் சொன்னால்... அவர் நம் ஏழு தலைமுறையைக் குறிப்பிடுகிறார்.
ஒரு தலைமுறைக்கு சராசரியாக 70 ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால் ஏழு தலைமுறைக்கு 490 வருடங்கள். ஈரேழு தலைமுறைக்கு 980 வருடங்கள் - கிட்டத்தட்ட ஆயிரம் (1000) வருடங்கள்.
ஆக பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் - ஈரேழு தலைமுறை (பதினான்கு தலைமுறை) என்று பொருள் பெறும்.
வேறு எந்த மொழிகளிலும் இந்த உறவு முறை இல்லை, அனு. தமிழுக்கே உண்டான ஒரு தனிச்சிறப்பு.
பொங்கலை சுவைத்த சுமதி, நன்னா வந்துருக்கேம்மா. நானும் இனி மண் பாண்டங்களில் சமைத்து பழகறேன் (பழகுகிறேன்). பாரம்பரியத்தை மீட்க முயல்வோம்.
சரி மாமி, நான் கிளம்பறேன். புளிக்காய்ச்சல் காய்ச்சனும், நாளைக்கு புளியோதரை பண்ணனுமே, என்று கூறி விடைபெற்றாள்.
தகவல் சேகரிப்பு
நிலைய அதிகாரி (ஓய்வு)
தெற்கு ரயில்வே
கதை வடிவம் : கிரு. விஜயராகவன்
Comments
Post a Comment