கதை மூலம் கற்போம் தமிழ் - 1
எனது கணினி (LAPTOP) சற்றே பழசாகி விட்டதால், ஒரு நல்ல மடிக் கணினிக்காக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சீனாவில் இருந்து வந்த என் பால்ய நண்பன் நடராஜன் அளாவியில் (WE CHAT) தொடர்பு கொள்ள (சீனாவில் புலனம் (WHATSAPP) கிடையாது. அளாவிதான் பயன்பாட்டில்), ஆலோசனை கேட்டேன்.
அவன், உடனே என்னிடம் "என்ன உபயோகம்" என்று வினவி அதற்கு ஏற்றாற்போல் உள்ளமைவை (CONFIGURATION) சொல்வதாக கூறினான்.
நான் அவனிடம், இது எனது இல்ல பயன்பாட்டிற்கு மட்டும் தான். மற்றும் எனது மகனின் நிகழ்நிலை (ONLINE) கல்விக்காகவும் பயன்படுத்த எண்ணுகிறேன்.
"இந்த எண்மின் (DIGITAL) உலகில், எனது கணினியை ஒளிர்விமுனை (LED) தொலைக்காட்சியில் இணைத்து இயக்க வேண்டும். திரை பெரியதாக இருப்பதால் எழுத்து பெரிதாக தெரியும். மற்றும் கண்களும் வருந்தாமல் இருக்கும்" என்றேன்.
அவனோ, "தற்போது வரும் கருவிகள் சாளரம் 10 (WINDOWS 10) இயக்க முறைமை (OPERATING SYSTEM) நிறுவியிறுப்பதால் கணிணிகளை வடம் (CABLE) மூலமாக அல்லது ஊடலை (BLUETOOTH) மூலமாக தொலைக்காட்சியுடன் இணைக்க முடியும்" என்றான்.
ஓ, அப்படியா... நன்று. இதை நான் இதற்கு முன் அறிந்திருக்கவில்லை என்றேன். மேலும், அவனிடம், "நான் புகைப்படம் எடுக்கும் பழக்கம் உள்ளவன். அதில் நிறைய தம்படமும் (SELFIE) உண்டு. அவற்றை தொகுக்க / திருத்தியமைக்க மற்றும் காணொளியாக்க ஏதுவாக எனது மடிக்கணினி அமைய வேண்டும்" என்றேன்
அதற்கென்ன, சரியான செயலியை நிறுவி, அது திறம்பட செயலாற்ற, ஒரு உள்ளமைவை பார்க்கலாம். மேலும் நீ அவற்றை காப்புத் தேக்கம் (BACK UP STORAGE) செய்ய விரலியைப் (THUMB DRIVE) பயன்படுத்த முடியும் என்று கூறினான்.
மேலும் அவனே தொடர்ந்து, "உனக்கு அச்சுப்பொறியும் (PRINTER) தேவையாக இருக்குமோ? சில நிறுவனங்கள், குடியரசு தினத்தை முன்னிட்டு சில சலுகைகள் மற்றும் இலவசத்தை அறிவித்துள்ளன. கணினியுடன் வரும் மின்னூக்கியைத் (CHARGER) தவிர, அச்சுப்பொறி (மைவீச்சு (INKJET) மற்றும் சீரொளி (LASER)) - வருடி (SCANNER) இணைந்த கருவிகள், திசைவிகள் (ROUTER) நல்ல விலையில் சலுகையில் கிடைக்கும். இத்தகைய கருவிகள் இருதிரட்சி (2D) அச்சில் முறையே தவிர, முத்திரட்சி (3D) அச்சில் முறைக்கு ஏதுவாகாது. யோசி", என்றான்.
நானோ, அதற்கான தேவை இருக்காது. மேலும் இந்த எண்மின் (DIGITAL) உலகில் இதற்கான அவசியம் எனக்கு இருக்காது என்றேன்.
நானே தொடர்ந்து, "ஆனால் நான் வாங்கும் கணினியை, என் வீட்டில் கண் காணிப்பிற்காக பொருத்தப்பட்டிருக்கும் மறைகாணியுடன் (CCTV) இணைக்க ஆசைப்படுகிறேன்" என்றேன்.
அதற்கென்ன, சில செயலிகளை பதிவிறக்கம் செய்து உனது கணினியில் இணைக்கலாம். மேலும், சில நிறுவனங்கள் மின்வெளி தாக்குதலை (CYBER ATTACK) சமாளிக்க, நச்சு நிறற் கொல்லி (ANTIVIRUS) மென்பொருளையும் தருகின்றன.
சரி நான் பார்த்துவிட்டு உனக்கு தெரிவிக்கிறேன். எது விருப்பமோ அதை வாங்கிக் கொள், என்றான்.
நன்றி என்று கூறி விடைபெற்றோம்.
சிறிது நேரம் கழித்து எனது அளாவியில் சில சிறுபடங்களையும் (THUMBNAIL) அதற்கான இணைப்பு, மற்றும் படங்களையும் அனுப்பி வைத்தான். நான் அப்படியே அச்செய்தியினை திரைப்பிடித்து (SCREEN SHOT or PRINT SCREEN) எனது தேடலுக்காக வைத்துக் கொண்டேன். தேடல் சீக்கிரம் நிறைவுரும்.
பின்குறிப்பு : சிறிது நாட்களுக்கு முன் ஆசிரியை சுபாஷினி , சில நுட்பவியல் கலைச்சொற்களை சேர்த்து உரையாடலை பதிவிட்டார். மீதியிருந்த சொற்களை வைத்து நான் ஒரு கலந்துரையாடலை பகிர்ந்துள்ளேன்.
எழுதிய பின் இதை எண்மின் ஆக்குவது எப்படி என்று எண்ணும் போது எழுத்துணரி (OCR) நுட்பம் மூலம் இதை இலக்க வடிவாக்கினேன்.
அந்த சொல் பட்டியலிலிருந்து, நான் பயன்படுத்தாத ஒரே வார்த்தை செறிவட்டை (SIM CARD). (என்ன ஒன்று மட்டும் தானா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது) என்னிடம் கைபேசி மற்றும் அதற்குள்ளே செறிவட்டை உள்ளதால் எந்த சலுகைகளுக்கும் மயங்கி தேவையற்ற இன்னொரு செறிவட்டை வாங்க முற்படவில்லை.
முயற்சி மற்றும் தொகுப்பு : கிரு. விஜயராகவன்
பல செய்தியை, காணொளியை, போன்வியை (MEME) இருத்தி அனுப்பும்போது, இதையும் பகிரலாமே !!
Comments
Post a Comment